"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும் பிற்றைநிலை
முனியாது கற்றல் நன்றே"

கற்பிப்பவருக்கு துன்பம் வரும்போது உடன் சென்று அதனை தீர்ப்பதற்கு துணை நிற்க வேண்டும்.மிகுதியான பொருளை அவருக்கு கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும் என்று மேற்கண்ட வரிகள் வலியுறுத்துகின்றன. குருகுல வாசத்தில் யாரோ ஒரு சிலருக்கு கிடைத்த இந்த கல்வி பல பல சமூக போராட்டங்களின் பயனாக இன்று அனைவருக்குமானதாக மாறி இருக்கிறது பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் இருக்கவேண்டும், பள்ளி படிப்பை விடுத்து இடைநிற்பவராகவோ, குழந்தை தொழிலாளியாகவோ இருந்து விடக்கூடாது என்ற அரசின் சட்டமும் கல்வி உரிமை சட்டம் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களும் இயற்றப்பட்டதன் காரணமாக கல்வி வாய்ப்பை வழங்கும் பாதுகாவலனாக இன்றைய அரசு பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன

அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் இன்று தனது வீட்டிற்கு அருகிலேயே உள்ள ஒரு பள்ளியில் கல்வி கற்பது நல்ல சமூக வளர்ச்சிக்கான அடிப்படையாகும். இந்திய கல்வி வளர்ச்சியில் தனியார் பங்களிப்பு உள்ள போதிலும் அவை மிகுந்த பொருட்செலவில் கல்வி வழங்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன, எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் வெறுமையான கட்டிடங்களில் கல்வி பயில்வது பழைய கதையாகிவிட்டது

தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில், நமது குளிக்கரை அரசுமேல்நிலைப் பள்ளி, வசதிகளிலும் தரமான கல்வி அளிப்பதிலும் உயர்ந்து நிற்கின்றது. திறமையான ஆசிரியர்கள், தரமான வகுப்பறைகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகம், அனைத்து வசதிகளும் கொண்ட அறிவியல் ஆய்வகங்கள், நூலகம் மற்றும் விளையாட்டு திடல் போன்றவை இப்பள்ளிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதோடு மாணவர்களின் கற்றல் சூழ்நிலையையும் இனிமை ஆக்கியிருக்கிறது மேலும் இத்தகைய கல்வி மாணவர்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் இலவசமாக கிடைத்திருப்பது கல்வித்துறையின் சாதனையாகும்

நமது குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி கற்றல் கற்பித்தலுக்கான ஏற்ற சூழ்நிலையை கொண்டுள்ளது. 6 முதல் 12 வகுப்புகள் வரை இப்பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் இடைநிற்றல் மற்றும் தேக்கம் இன்றி கவனமுடன் கல்வி அளித்து தேர்ச்சி அடையசெய்து சமூகத்திற்கான சிறந்த குடிமகன்களாக உருவாக்கும் பொறுப்பான பணியை பெருமையுடன் இப்பள்ளி மேற்கொண்டு வருகின்றது.

இத்தகைய சிறப்புகளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அரசு பள்ளிகளின் வரலாற்றில் தமிழக கல்வித்துறையின் ஒருங்கிணைப்போடு இப்பள்ளிக்கென ஒரு நவீன இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது, இவ்விணைய தளம் வாயிலாக பள்ளியைப் பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டு பள்ளி, மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தபெரு முயற்சிக்கு வடிவம்கொடுத்த இப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு.கோ.கௌதமன் அவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் மனதார பாராட்டுகிறோம்.

சமூக வளர்ச்சியில் பங்குபெறும் சிறப்பான இப்பள்ளியினை வழிநடத்தும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள். கல்வியாளர்கள் அனைவருக்கும் இத்தளத்தின் மூலமாக பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன். பொதுமக்கள் இப்பள்ளியில் மாணவர்களைச் சேர்த்து பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Education is the most powerful weapon which you can use to change the world

தலைமையாசிரியர்,
அ.மே.நி.பள்ளி, குளிக்கரை
மார்ச்-2020